இந்து சமுத்திரத்தின் கண்ணீர்த் துளியான இலங்கையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்கள் தனிச் சிறப்பம்சங்களைக் கொண்ட தனித் தாரகையாகத் திகழ்கின்றது.
கலைக்குப் புகழ் பெற்ற தமிழன், அதற்குப் புகழ் கொடுத்த மண் இந்த மண், உலகம் முழுதும் பரந்து வாழும் தமிழ் மக்களை இம் மண்ணுடன் ஒன்றிணைக்கும் விசேட திட்டங்களை உருவாக்கி அமுல்படுத்துவேன். குறிப்பாகப் புலம்பெயர் உறவுகளையும், தமிழ் நாட்டிலுள்ள தமிழர்களையும் தாயகத்துடன் இணைக்கும் இணைப்புப்பாலத்தை நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கூடாக செயல் வடிவம் பெறச்செய்வேன். எம் மக்களுக்குப் பல வழிகளிலும் துணையாய் இருக்கின்ற உலகத் தமிழ் உறவுகள். புலம்பெயர் தமிழர்களின் மக்கள் நலன் சார் சமூகப் பொருளாதார ஆதரவுகளை ஒரு குடையின் கீழ் கொண்டு வர ஏதுவான நடைமுறைகளை மேற்கொள்வதனூடாக, உதவித்திட்டங்களை பொருத்தமானவர்களுக்குச் சென்றடைய வழிசமைப்பேன். எம் மண்ணிலிருந்து உயர்படிப்பு, தொழில் வாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் நம் உறவுகளுக்கு மேற்படி இணைப்பினூடாக உதவிகள் கிடைக்க வழிவகைகளை உருவாக்குவேன். புலம்பெயர் தொழில்தருநர்களையும், ஆர்வமான இளையேர்களையும் இணைத்து தொழில் வாய்ப்புக்களை தமிழ் இளைஞர்களுக்கு எம் மண்ணிலே கிடைப்பதை உறுதி செய்வேன். வானத்திலுள்ள நட்சத்திரங்களைப் போல உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழர்களுக்காக ஒரு தளத்தினை உருவாக்கி அவர்களின் அறிவு. உலகளாவிய அனுபவங்களைப் பகிர வழிவகுப்பேன். பல்வேறுபட்ட மொழிகளைப் பேச்சு மொழியாகக் கொண்ட நாடுகளில் வசித்து வரும் தமிழர்களின் தாய் மொழிப் பற்றை உறுதி செய்யும் வகையில் இணையத்தினூடாக தமிழ்மொழிக் கற்கை நெறிகளை ஆரம்பிப்பேன். உலகத் தமிழர்கள் தமது பூர்வீக இடங்களைப் பற்றியும் எம் மண்ணின் கலாச்சாரச் சிறப்புப் பற்றியும் அறியக்கூடியவாறு விவரங்களைத் திரட்டி இணையத்தில் கிரமமான முறையில் பதிவேற்றுவேன். எம் மண் பெற்றெடுத்த சிறப்பை அழிப்பதோ, சிதைப்பதோ நடவாத காரியம் என்பது எனது திடமான நம்பிக்கை.
- உலகத்தமிழர் – இணைப்புப்பாலம்
- உலகத்தமிழர் – அறிவுப்பாலம்
- உலகத்தமிழர் – உறவுப்பாலம்